கரைந்து போன சூடம்

சூத்திர
வாழ்க்கையின் முதலானவன்
திசைகளுக்கு
திசை காட்டுபவன்

எண்ணிலடங்கா

கண்களை கொண்டவன்
தாமரையின் காதலன்
பூமியின் பகலவன்..

இவனுக்கும்

என் மேல
ஒரு கண்ணாம்!

நான்

கருத்தரித்த நாளை
பிரம்மனிடம் கேட்டு
குறிப்பெடுத்து
கொண்டானாம்

நான்
பூப்பெய்தியதை
நானே
தெளியும் முன்

நாளும்

நேரமும்
பார்த்து

உலகை
இருளில் ஆழ்த்தி
பரிதவிக்கும்
தாமரையை விடுத்து..

இக்காமுகன்!


என்

வீட்டுக்கதவையும்
கேளாமல்
நுழைந்தான்

அவனது

கீற்றுப் பார்வைகளால்
என்னை
ஆராய்ந்தான்..

அவன்

என்னுள்
ஊன்றும் முன்

அவனிடமிருந்து

என்னை விடுவித்து

எந்தன்

கற்பு சூடாத்தால்

அவனை

எரித்து விடுவதாக
கனா
ஒன்று கண்டேன்..

விழித்தேன்

வியந்தேன்!!

அதுவும்

அதிகாலை கனவல்லவா!
பலித்திடுமாமே..

சூரியனை

எரித்து

கற்பில்

கண்ணகியையும்
மிஞ்சிவிட்டதாக
கர்வப்பட்டேன்..

கனவின்

ஆயுள்
கரைவதற்குள்..

நிஜக்காமுகன்

ஒருத்தன்

எந்தன் கற்பை

கரையாக்கிவிட்டானே

அதிகாலைக் கனவு

அச்சுப்பிழையாகிப் போனதே..

கம்பளிப் பூச்சியாய்

என் மேல் ஊர்ந்து

விரலோடு விரல்களை

மரவட்டைகளாக்கி

மர்ம

பிரதேசங்களைத் தேடி

கரப்பான் பூச்சியாய்

இருளினுள் விரைந்து

இதழின்

இசைவின்மையையும் தாண்டி..

என்னை

இழிவுக்குள்ளாக்கி விட்டானே

இன்னொரு உயிரை

எனக்குள்
ஜனிக்கப் பார்த்தானே

நுனி முதல்

அடி வரை
என்னை
எச்சில் படுத்தி விட்டானே

என் விரல்கள்

தீண்டாத
இடம் தேடி

அவன்

விரல் கொண்டு
தீண்டி

என்னை

வசை மொழிகளுக்கு
வழி வகுத்து விட்டானே..

ஆடையின்

சிறு தீண்டலுக்கும்
நான்
சிவந்து போவேனே!

எங்கே போனது

என் நாணம்?

இப்போதும்

சிவந்து போயிருக்கிறேன்

நாணத்தால் அல்ல


நக கீறல்களாலும்

என்னுயிர்
ஒழுகியதாலும்..

நான்

சேற்றில் பிறந்திராத
செந்தாமரை என்றாலும்

அவன்

என் மேல் விழுந்து

பன்றியாய்

புரண்டு
பிராண்டிவிட்டானே

சூடமான

என் கற்பை

சுயிங்கமென நினைத்து

மென்று துப்பிவிட்டானே..

அடி வயிறோடு

என்
பாவி நெஞ்சும்
பங்கப் பட்டதென
பற்றி எரிகிறதே

தேகம்

சிவக்கும் வரை
குளித்தும்

அந்த துர்நாற்றம்

நீங்காமல்
நெஞ்சை குமட்டுகிறதே..

உடலில்
கூடிய பாரத்தை
கரைத்துவிடலாம்

உள்ளத்தில்
கூடிய பாரத்தை
கரைப்பதெப்படி?

கருவை
வேண்டுமானால்
கலைத்துவிடலாம்

கற்பின்
களங்கத்தை
துடைப்பதெப்படி??

அவன்
தீண்டிய இடங்களை

எரித்திடலாம் என்றால்
கருகிவிடுவேனே

வெட்டியெறியலாம் என்றால்
மாய்ந்திடுவேனே

மாய்ந்தாலும்

ஊரார்
ஆளுக்கொரு
கதை கட்டி

என்
சாவையும்
என்னை
சார்ந்தவர்களையும்
களங்கப்படுத்தி விடுவார்களே..

களங்கத்தை
யாரிடமாவது
முறையிடலாமென்றால்

சூடுப்பட்ட
நெஞ்சில்
சூலம் பாய்ச்சி

ஊர் 
தண்டோரா போட்டு
சிரித்திடுவார்களே..

இது வரை
ஏன் வாழ்ந்தேன்

இனி
எங்கே போய் வாழ்வேன்
எப்படி வாழ்வேன்

என
வாழ்க்கையே
கேள்விக்குறியாகிப் போனதே??

இக்காமுகனும்

ஒரு பெண் மூலம்
ஜனித்தவன்தானே..!!??






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக